Friday, October 15, 2010

நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் நபியின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன்களும் இருந்தனர். அவ்விருவரில் ஒருவனை ஓநாய் கொண்டு சென்று விட்டது. உடனே அவர்கல் ஒருத்தி, தன் தோழியிடம், உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது என்று கூற, மற்றொருத்தி அவடம், உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது என்று கூறினாள். ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்கடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்கல்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பத்தார்கள். (அதில் திருப்தியில்லாத) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்கடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்கடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்கருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன் என்று கூறினார்கள். அப்போது இளையவள், அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன் என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது என்று தீர்ப்பத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி . நூல்: புகாரி 3427

இந்தச் சம்பவத்தில், அந்தக் குழந்தை யாரிடம் இருந்தாலும் உயிரோடு இருக்கட்டும் என்று தான் ஒரு உண்மைத் தாய் விரும்புவாள். அது தான் ஒரு உண்மையான தாயின் இலக்கணம் என்ற யுக்தியை அடிப்படையாகக் கொண்டு சுலைமான் (அலை) அவர்கள் இப்படியொரு அழகான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்போது இது போன்ற ஒரு வழக்கு இன்றைய நீதிபதிக்கு முன்னால் வரும் போது இதே யுக்தியை முன்மாதிரியாகக் கொண்டு தீர்ப்பளிக்க முடியாது. ஏனெனில் உண்மையான தாய் மட்டுமல்ல, தாயைப் போன்று நடிக்கும் நாடகத் தாயும் அந்தக் குழந்தையை வெட்டாதீர்கள்; அந்தக் குழந்தை உயிருடன் இருந்தால் போதும் என்ற கருத்தில் மேலே கண்ட அதே பாணியில் உணர்ச்சி பொங்க உள்ளத்தைத் தொடும் வகையில் வசனம் பேசி விடுவாள். அப்படி அவள் கூறினால் வழக்கை உன்னிப்பாக விசாரிக்கும் நீதிபதிக்கும், உற்று நோக்கிக் கொண்டிருக்கும் உலகத்திற்கும் உண்மை தெரியாமல் போய் விடும்.
அப்படியானால் இதற்கு மாற்றுத் தீர்வு கண்டாக வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். ஆம்! காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் மாற்றுத் தீர்வு கண்டாயிற்று!

பிரச்சனைக்குரிய குழந்தை, அந்தக் குழந்தைக்கு உரிமை கொண்டாடும் இரண்டு தாய்மார்களின் இரத்தம் சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்படுகின்றது. மரபணு சோதனை செய்யப்படுகின்றது. பெற்ற தாயின் இரத்தம் குழந்தையின் இரத்தத்துடன் ஒத்துப் போகின்றது. உண்மைத் தாய் யாரென்று விபரம் உலகுக்குத் தெரிகின்றது. போலித் தாயின் முகத்திரை கிழிக்கப்படுகின்றது. இம்மாபெரும் தீர்வு இன்றைய அறிவியல் புரட்சியின் விளைவாகும்.

இது போன்ற வழக்குகளில் மார்க்கத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படும் போது, அறிவியல் வளர்ச்சியின் துணையின்றி தீர்ப்புகள் வழங்க முடியாது என்பதை அறிகிறோம். அப்படியானால் அறிவியல் வளர்ச்சியும் மார்க்கத்தின் நிலைப்பாடும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து அமைந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு அறிவியலை அப்புறப்படுத்தினால் அதன் விளைவுகள் படுபாதகமானவையாக அமையும்.

வேதத்தை விட்டு விலகியதால் விளைந்த விபரீதங்கள்
அல்குர்ஆனை, அல்லாஹ்வின் மார்க்கமான இந்த இஸ்லாத்தை அணுவளவு கூட அறிவியலை விட்டுப் பிரிக்கக்கூடாது. அப்படிப் பிரித்து வைத்தால் வேதத்தை விட்டு மக்கள் பிரிந்து, விபரீதமான சித்தாந்தங்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகி விடும்.

அறிவியல் உலகில் மனித அறிவு கருத்தரித்துப் பிரசவித்த கண்டுபிடிப்புக்கள் ஏராளம்! ஏராளம்!! மனிதன் பயணம் செய்யும் அறிவியல் வண்டியின் சக்கரத்தின் வேகமான சுழற்சிக்கும், அறிவியலின் அபார வளர்ச்சிக்கும் அல்குர்ஆன் முட்டுக்கட்டையாக முன்னால் வந்து நிற்பதாகக் கூறினால், அதை முட்டித் தள்ளிவிட்டு அறிவியலாளர்கள் முன்னேறிச் செல்லத் தயங்க மாட்டார்கள்.

சூரியன் மற்றும் அதன் கோள்கள் பூமியைச் சுற்றுகின்றன என்று கிறித்தவ திருச்சபை நம்பிக் கொண்டிருந்த கருத்துக்கு மாற்றமாக, அதாவது சூரியனைத் தான் பூமியும் மற்ற கோள்களும் சுற்றுகின்றன என்ற கருத்தைக் கொண்டிருந்த கோபர் நிக்கஸ், கலீலியோ, புருனோ போன்றோர் திருச்சபையின் தண்டனைக்கு உள்ளானார்கள். புருனோ உயிருடன் கொளுத்தப்படுகின்றார்.
விவிலியத்தை (பைபிளை) வேதமாகக் கொண்ட திருச்சபை, வளர்ந்து வரும் வேகமான விஞ்ஞான வளர்ச்சிக்கு விவிலியத்தின் மூலம் விடையும், விளக்கமும் சொல்லாமல் தடையும், தடையை மீறுவோருக்குத் தண்டனையும் கொடுத்தது. விடையும் விளக்கமும் தராத வேதம் இனி நமக்கு எதற்கு என்று வேத உலகத்திற்குப் பிரியா விடை கொடுத்து விட்டு வெளியேறினர் விஞ்ஞானிகள்.வேதத்தை விட்டு அறிஞர் உலகம் விரைவாக வெளியேறிப் போனதால் விளைந்த விளைவுகளில் முதல் விளைவு நாத்திகம்! நாத்திகம் என்ற விஷ வாயு மனித நாசிகளில் நுழைந்து அவனது சுவாசப் பைகளை நச்சுப் பைகளாக மாற்றின.

மனிதனை, மதத்தை விட்டுப் பிரிக்கும் மிகப் பெரிய சீர்கேட்டைக் கொண்ட மதச்சார்பின்மை என்ற சித்தாந்தம் தோன்றியது.

முதலாளி – தொழிலாளி, வலியவன் – எளியவன் என்ற இரு சக்திகள் ஒரு சேரச் செயல்படும் போது தான் உலகம் சீராக இயங்கும் என்ற நடைமுறை வாழ்க்கைச் சித்தாந்தத்திற்கு மாற்றமான பொதுவுடைமை (கம்யூனிஸம்) எனும் புற்று நோய் புறப்பட்டு மனித சமுதாயத்தை அரிக்க ஆரம்பித்தது.
அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம் அப்படியே அப்பழுக்கற்றதாக, பாதிரிகளின் கரை படிந்த கைவரிசை படியாத பரிசுத்த வேதமாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட பாதகமான விளைவுகளை பைபிள் சந்தித்திருக்காது.

அல்குர்ஆனும் அறிவியலும்
ஐரோப்பாவிலுள்ள அன்றைய அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் தங்கள் பார்வைகளை அல்குர்ஆனில் செலுத்தியிருப்பார்களானால் தங்கள் அறிவியல் பயணத்தின் பாதையில் அறிவுச் சுடரைப் பிரகாசிக்க வைக்கும் அல்குர்ஆனின் வெளிச்சத்தைக் கண்டு அதிசயித்துப் போயிருப்பார்கள்.

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன? பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
அல்குர்ஆன் 88:17-20

ஒட்டகத்தைப் பற்றி, அகன்று நீண்டு கிடக்கும் வானத்தைப் பற்றி, ஓயாது சுழன்று கொண்டிருக்கும் பூமியைப் பற்றி, அந்தப் பூமி பொதிந்து நிற்கும் மலைகளைப் பற்றி ஆராயச் சொல்லி மனிதனின் அறிவுக் கண்களை அல்குர்ஆன் திறந்து விடுகின்றது.

(அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
அல்குர்ஆன் 55:17

கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.
அல்குர்ஆன் 70:40

பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில் உதித்து மறு இடத்தில் மறைந்து விடும். ஒரு கிழக்கு, ஒரு மேற்கு தான் இருக்கும்.

பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது.
பூமி உருண்டையானது என்ற புதுக் கருத்தை, புரட்சிக் கருத்தை முதன் முதலில் புரிய வைத்தது உலகப் பொதுமறையான அல்குர்ஆன் தான்.

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 55:33

பரந்த வானப் பெருவெளியில், பறவைகள் பறப்பதைக் கண்டு மட்டுமே பழக்கப்பட்ட மனித சமுதாயத்தைப் பார்த்து, இந்த ஆகாய வெளியில் பலம் கொண்ட கலங்கள் மூலம் பறந்து செல்லுங்கள் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பறை சாற்றியது இந்தத் திருக்குர்ஆன்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.
அல்குர்ஆன் 55:19, 20

கடல் ஆராய்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத அன்றைய மக்களிடம் திருக்குர்ஆன் கூறிய இந்த வார்த்தைகள் இன்றைய
காலத்துக்கண்டுபிடிப்பானது.

இந்த வசனங்களிலிருந்து நாம் கிடைக்கப் பெறும் உண்மை, அறிவியலுக்குத் திருக்குர்ஆன் தடை போடவில்லை என்பதே! மாறாக அறிவு ஆராய்ச்சிக்கு ஆர்வத் தீயை மூட்டி அதன் ஒளி வெள்ளத்தை உலகம் முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது.

அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆர்வமூட்டும் வசனங்கள் அல்குர்ஆன் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. தலைப்பிற்காக இங்கு ஓரிரு வசனங்களை மட்டும் சுட்டிக் காட்டுகின்றேம்.

கிறித்தவ திருச்சபையும் இஸ்லாமிய திருச்சபையும்அறிவுத் தேடலை அல்குர்ஆனும் அணை போட்டுத் தடுத்திருக்குமானால் கிறித்தவ உலகம் சந்தித்த அதே விளைவுகளை இஸ்லாமும் சந்தித்திருக்கும். ஆனால் இது அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்ட வேதமல்லவா? அதனால் கிறித்தவ உலகம் சந்தித்த விளைவுகளைச் சந்திக்கவில்லை. சந்திக்கவும் செய்யாது.

இருப்பினும் கிறித்தவ திருச்சபை செய்த அதே கைங்கரியத்தை இங்குள்ள இஸ்லாமிய உலமா திருச்சபை அரங்கேற்றியது தான் மிகப் பெரிய வேதனையாகும்.

நான்கு மத்ஹபுகள் என்ற நான்கு சுவர்களை எழுப்பி இந்தக் கட்டத்தைத் தாண்டி இஜ்திஹாத் (குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குதல்) கூடாது என்ற ஒரு முடிவை எடுத்து விட்டனர்.

இவர்களின் இந்த முடிவுக்குத் தோதான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ ஆதாரமாகக் காட்டவில்லை. மாறாக, தங்கள் முடிவுக்குத் தக்க குர்ஆன், ஹதீஸைச் சாதகமாகவும் மிகச் சாதுரியமாகவும் வளைக்கின்றனர்.
ஆட்சி, அதிகாரம் இவர்களது கைகளில் இருந்திருக்குமானால் அந்தக் கிறித்தவ திருச்சபை செய்த வேலைகளை, கொளுத்துவது, கொல்வது போன்ற கொடூரத் தண்டனைகளை இவர்களும் கோலாகலமாக நிறைவேற்றியிருப்பார்கள்.

நான்கு இமாம்களும் நவீன அறிவியல் புரட்சிகளும்

எல்லாப் பிரச்சனைகளுக்கும் இந்த நான்கு இமாம்களும் தீர்வுகளைக் கண்டு விட்டார்கள். இனி மேல் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள் எதுவுமில்லை. இனி மேல் யாரும் இஜ்திஹாத் செய்ய வேண்டியதில்லை. இஜ்திஹாதின் கதவு மூடப்பட்டு விட்டது என்று இந்த உலமா சபை ஒரேயடியாகச் சாதித்து வருகின்றது.

இமாம்கள் காலத்தில் இல்லாத, உருவாகாத எத்தனையோ அறிவியல் புரட்சிகள் இன்றைய உலகில் அடுக்கடுக்காக, அடுத்தடுத்து உருவாகிக் கொண்டிருப்பதை இவர்கள் வெளிப்படையாகவே கண்டு வருகிறார்கள்.
பறவைகளின் கால்களில் கடிதங்களைத் தொங்க விட்டுச் செய்தி அனுப்பும் காலம் மலையேறிப் போய் இன்று, இங்கிருந்து அனுப்பப்படும் செய்தியை அடுத்த நொடியில் அடுத்த கண்டத்தில் அச்சாக்கி, செய்தியாக்கும் சாதனங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன.

ஆசியாக் கண்டத்திலிருந்து ஒருவர் பேசும் பேச்சை ஐரோப்பாக் கண்டத்திலிருக்கும் ஒருவர் செவியுற்று பதில் தந்து கலந்துரையாடும் தொலைத் தொடர்புக் கருவிகள், இண்டர்நெட் வகையறாக்கள்.
ஒரு மனிதன் குழிக்குள் போய் பல ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் அவனது உருவத்தை உடைசல் இல்லாமலும், குரலைப் பிசிறில்லாமலும் பதிந்து வைத்திருக்கும் ஒளி, ஒலிப் பதிவுகள்.இவையெல்லாம் செய்தி, ஒலி, ஒளிபரப்புத் துறையில் உருவாகி விட்ட அறிவியல் புரட்சிகள்.

உடலின் வெளிப்புறத்தில் ஒரு புண் பட்டு விட்டால் அதற்கு மூலிகையை அரைத்துத் தேய்ப்பான் மனிதன். உடலுக்குள் உள்ள நோயைக் குணப்படுத்த மூலிகையைக் கரைத்துக் குடிப்பான்.

இந்த நிலை மாறிப் போய், துடித்துக் கொண்டிருக்கும் இதயத் துடிப்பு அடங்கிப் போகாத வகையில் இதயக் கூட்டைத் திறந்து, இதயம் மற்றும் இதர உதிரிப் பாகங்களைத் தொட்டு அதன் கோளாறுகளைக் களையும், தேவைப்பட்டால் அவற்றை மாற்றி விட்டு வேறு பாகங்கள் பொருத்தும் புரட்சியுகமாக மருத்துவ உலகம் மாறி விட்டது.

இவையெல்லாம் நான்கு இமாம்களுக்குப் பின்னாலுள்ள காலத்தில் மனிதன் கண்ட மாபெரும் அறிவியல் புரட்சிகளாகும். இப்படிப் புதிது புதிதாக உலகத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்கும் அறிவியல் புரட்சிகளுக்கும் பிரச்சனைகளுக்கும் ஈடுகட்டும் வகையில் ஷரீஅத் தரப்பிலிருந்து சளைக்காமல் தீர்வுகளைத் தரக்கூடிய சட்ட வல்லுனர்கள் இருந்தாக வேண்டும். இல்லையேல் இஸ்லாமிய ஷரீஅத் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதல்ல; இவற்றிற்கான தீர்வுகள் இஸ்லாத்தில் இல்லை என்ற நிலை தோன்றி விடும். இந்த நிலையை விட்டும் அல்லாஹ் ஷரீஅத்தைப் பாதுகாத்திருக்கின்றான்.

கல்வியறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 12:76)

அறிவியல் உலகில் எவ்வளவு பெரிய அறிவியலாளர்கள் தோன்றினாலும் அதை விட மேலான அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் இந்த ஷரீஅத்திலும் இருந்து கொண்டே இருப்பார்கள்.

இறுதி நாள் வரை தோன்றக் கூடிய எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதைத் தீர்த்து வைக்கும் திறனாய்வாளரை அல்லாஹ் தந்து கொண்டேயிருப்பான் என்பதை இந்த வசனத்தின் மூலம் அறிகின்றோம். இறுதி நாள் வரை இஜ்திஹாத் எனப்படும் ஆய்வின் வாசல் திறந்தே இருக்கின்றது; திறந்து தான் இருக்க வேண்டும்.

இஜ்திஹாதின் வாசல் மூடப்பட்டு, முத்திரையிடப்பட்டு விட்டது என்று முழக்கமிடும் இந்த உலமா திருச்சபையை நோக்கி நாம் சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

நான்கு இமாம்களுக்குப் பிறகு உருவான, அறிவியல் வளர்ச்சியுடன் தொடர்புடைய மார்க்கப் பிரச்சனைகளுக்கு, அந்த இமாம்களின் நூல்களிலிருந்து தீர்வுகளைத் தர வேண்டும். நான்கு இமாம்களுக்குப் பின் வந்த மத்ஹபு அறிஞர்களின் தீர்ப்பைத் தரக் கூடாது.

இந்தப் பிரச்சனைகளுக்கு நான்கு இமாம்கள் அளித்த தீர்ப்பிலிருந்து, அல்லது அவர்கள் எழுதிய நூற்களிலிருந்து தீர்வுகளைக் காட்டினால் அவர்களின் பாதைக்குச் செல்ல நாம் தயாராக இருக்கிறோம். அல்லது நாம் செல்லும் இந்தச் சரியான பாதைக்கு அந்த ஆலிம்கள் வர வேண்டும்.
குறைந்தபட்சம், நான்கு இமாம்களைப் பின்பற்றாதவர்கள் வழிகேடர்கள் என்ற வெற்றுக் கோஷத்தையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போது அறிவியல் வளர்ச்சியுடன் தொடர்புடைய மார்க்கப் பிரச்சனைகளுக்கு வருவோம்.

1. ஆடியோ, வீடியோ கேஸட்டுகள் மூலம் ஒளிபரப்பப்படும் கிராஅத்தில் இடம் பெற்றுள்ள ஸஜ்தா வசனங்களைச் செவியுறும் போது அவற்றுக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமா?

2. பெண், மாப்பிள்ளை இருவரும் பார்த்துக் கொண்டாயிற்று. திடீரென்று மாப்பிள்ளை வெளிநாட்டுக்குப் புறப்பட்டுப் போய் விடுகின்றார். இதன் பிறகு, திருமணத்திற்குத் தேவையான மற்ற நிபந்தனைகளை தொலைபேசி அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நிறைவேற்றி திருமணம் செய்யலாமா?

3. தொலைபேசி அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விவாகரத்துச் செய்யலாமா?

4. சவூதியா விமானம் சென்னையிலிருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் புறப்படுகின்றது. சவூதி நேரப்படி 4 மணிக்குத் தரையிறங்குகின்றது. அப்போதைய இந்திய நேரம் 6.30 மணி, சென்னையில் சூரியன் மறையும் நேரமாகும். நோன்பு நோற்று விட்டுப் பயணம் செய்த ஒருவர் இந்த நேரத்தில் நோன்பு துறக்க வேண்டுமா? அல்லது சவூதியில் சூரியன் மறையும் நேரத்தில் தான் நோன்பு துறக்க வேண்டுமா?

5. இரத்த தானம் செய்யலாமா?

6. கண் தானம் செய்யலாமா?

7. கிட்னி செயலற்றுப் போன ஒருவருக்கு கிட்னி தானம் செய்யலாமா?

8. தற்போது கிட்னி திருட்டு நடைபெற்று வருவதை நாம் அறிவோம். கிட்னி
திருடியவன், விலை மதிப்பு மிக்க ஒரு பொருளைத் திருடி விட்டான் என்ற அடிப்படையில் அவனது கையை வெட்ட வேண்டுமா? கண்ணுக்குக் கண், காதுக்குக் காது என்ற அடிப்படையில் அவனது கிட்னியை எடுக்க வேண்டுமா?

9. தொழுகை நேரம் சூரியனை அடிப்படையாகக் கொண்டே பூமியில் கணிக்கப்படுகின்றது. இந்தப் பூமி என்ற வட்டத்தை விட்டு வெளியேறி விண்வெளிக்கு ஒருவன் சென்று விட்டால் தொழுகை அவனுக்குக் கடமையா? நேரங்குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குறிப்பிடும் இந்த நிபந்தனை நீங்கி விடும் போது தொழுகை என்ற கடமையும் நீங்கி விடுமா?

10. சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறச் செய்யலாமா?

11. குளோனிங் மூலம் மனிதனை, மற்ற உயிரினங்களை உருவாக்கலாமா?

இது போன்ற பிரச்சனைகளுக்கு நான்கு இமாம்களின் தீர்ப்புகளிலிருந்து பதிலைத் தருவார்கள் என்று எதிர்பார்ப்போமாக! -எம். ஷம்சுல்லுஹா
நன்றி : :www.rasminmisc.blogspot.com



No comments:

Post a Comment